வண்ணக்கழுத்து 5 (ஆ ): வண்ணக்கழுத்தைத் தேடி

மாயக்கூத்தன்

அடுத்த இரவு, அடர்ந்த காட்டில் மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்தபோது என்னுடைய சிக்கிம் நண்பனின் வீட்டையும் அதன் சவுகரியங்கள் பற்றியும் பல முறை நினைத்துப் . பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாள் முழுக்க நடந்து விட்டு, பயங்கரமான காட்டின் மத்தியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆலமரத்தில் அன்றைய இரவைக் கழிப்பதை யோசித்துப் பாருங்கள். பொதுவாக, உயரமான இடங்களில் ஆலமரம் வளர்வதில்லை என்பதால், அந்த மரத்தைக் கண்டுபிடிக்க அரைமணி நேரத்துக்கும் சுற்று கூடுதலாகவே ஆனது. ஒரு யானை பின்னோக்கி நடந்துவந்து தாக்கும்போது, மரம் உடைந்து விடாதபடிக்கு அது தண்டியான மரமாக இருக்க வேண்டும். இப்படித்தான் சில பெரிய மரங்களை யானைகள் சாய்த்துவிடுகின்றன. எனவே, நாங்கள் உயரமான மரத்தைத் தேட வேண்டியிருந்தது. ஒரு யானையின் தும்பிக்கைக்கு உச்சிக்கிளைகள் எட்டாத அளவு உயரமாகவும், இரண்டு யானைகள் சேர்ந்து இரட்டிப்பு பலத்துடன் தள்ளினாலும் உடைக்க முடியாதபடிக்கு தாட்டியாகவும் இருக்கும் மரத்தைத் தேடினோம்.

கடைசியில் நாங்கள் விரும்பியபடியே ஒரு மரத்தை கண்டுபிடித்தோம். ஒரு மனிதனின் முதுகளவுக்கு தண்டியாக பரந்து விரிந்திருந்த கிளைகள் கொண்ட மரத்தை அடைந்தோம். அங்கு,, ரட்ஜா கோண்டின் தோளில் ஏறி நின்றான். நான், அவனுடைய தோளில் நின்று அந்தக் கிளைகளில் ஒன்றின்மீது ஏறி அமர்ந்து கொண்டேன். அங்கிருந்து, நாங்கள் இதைப் போன்ற பயணங்களில் அவசரத்துக்கு உதவும் என்று கையோடு கொண்டு போகும் கயிற்று ஏணியை கீழே இறக்கினேன். முதலில் ரட்ஜா ஏறி என் பக்கத்தில் உட்கார்ந்தான். அடுத்து கோண்ட் ஏறி எங்களுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டார். இப்போது, எங்களுக்குக் கீழே கோண்ட் நின்றிருந்த இடம், நிலக்கரிச் சுரங்கத்தின் மையப்பகுதி போல இருண்டிருந்தது. ஆனால், அங்கு இரண்டு பச்சை விளக்குகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தெரிந்தன. அவை யாருடையவை என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ”நான் இன்னும் இரண்டு நிமிடங்கள் தாமதித்திருந்தால் போதும், கோடு போட்டவன் என்னைக் கூறு போட்டிருப்பான்” என்று கோண்ட் விளையாட்டாய்ச் சொன்னார்.

தன் இரை தப்பித்துவிட்டதை பார்த்த புலி, காற்றைச் சாபத்தால் பொசுக்குவதுபோல்,, இடியாய் உறுமியது. உடனடியாக பதற்றமான ஒரு மெளனம் விழுந்து, எல்லா பூச்சிகளின் சப்தங்களையும், சின்ன விலங்குகளின் சப்தங்களையும், நசுக்கிவிட்டது. மெளனம் மேலும் இறங்கி பூமியில் ஆழமாக புதைந்து, மரங்களில் வேர்களைப் பிடித்துக் கொண்டது போல் தோன்றியது.

உட்கார்ந்திருந்த இடத்தில் எங்களை பத்திரப்படுத்திக் கொண்டோம். மிகவும் நெகிழ்வான கயிறு ஏணியை கோண்ட் தன் மீது சுற்றிக் கொண்டு பின்னர் ரட்ஜாவையும் என்னையும் சுற்றிவிட்டு, மீதியை மரத்தின் பிரதான தண்டில் கட்டினார். ஒவ்வொருவராக எங்கள் எடையை அது தாங்குமா என்று சோதித்துப் பார்த்தோம். தூக்கத்தில் எங்கள் குழுவில் யாரும் காட்டுத் தரையில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு. தூங்கும் போது உடம்பு தளர்ந்து போய் கல் போலக் கீழே விழுவதுதானே இயல்பு.. கடைசியாக நித்திரை அழுத்தும் போது, கோண்ட் தன் கைகளை எங்களுக்குத் தலையணை போல் முட்டுக் கொடுத்து வைத்துக் கொண்டார்.

தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துவிட்ட பின், இப்போது எங்கள் மொத்த கவனத்தையும் கீழே நடப்பதில் செலுத்தினோம். எங்கள் மரத்துக்கு கீழேயிருந்து புலி மறைந்துவிட்டது. பூச்சிகள் மறுபடியும் சத்தம் போட ஆரம்பித்திருந்தன. ஆனால், அவ்வப்போது ஏதாவது பெரிய உருவங்கள் தூரத்தில் இருக்கும் மரங்களிலிருந்து தொப்பென்று மெல்லதிர்வோடு குதித்து இறங்கும்போது, தங்கள் சத்தத்தை சில நொடிகள் நிறுத்திக் கொண்டன. குதித்தவை, சிறுத்தைகளும் கருஞ்சிறுத்தைகளும். நாளெல்லாம் மரங்களின் மீது உறங்கிவிட்டு இப்போது இரவில் வேட்டைக்காக கீழே தாவுகின்றன.

அவை போன பின்பு, தவளைகள் பாடின,, பூச்சிகள் தொடர்ந்து ரீங்காரமிட்டன, ஆந்தைகள் அலறின. வைரத்தைப் போல் ஒலியின் பல்லாயிரம் முகங்களும் திறந்து கொண்டன. காக்கப்படாத கண்களுக்குள் பாயும் சூரியக் கிரணங்கள் போல, காதுக்குள் சப்தங்கள் துளைத்துச சென்றன. தனக்கு முன்னால் இருக்கும் எதையும் நொறுக்கி உடைத்துக்கொண்டு ஒரு காட்டுப் பன்றி சென்றது. சீக்கிரமே தவளைகள் தங்கள் சத்தத்தை நிறுத்தின. கீழே தரையில், உயரமான புற்களும் மரங்களின் கீழ் வளர்ந்திருக்கும் செடிகளும் தானியக் குவியல் எழுவதைப் போல் சத்தம் எழுப்பி, பின்பு பெருமூச்சு போல ஓய்ந்தன. சுழலும் கொடும் நீர்சசுழியைப் போல, அந்த மெல்லிய பெருமூச்சு சுழன்றபடி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவந்து, நாங்களிருந்த மரத்தைத் தாண்டிச் சென்றது. தப்பித்தோம். தண்ணீர் குடிக்கச் செல்லும் ஒரு மலைப்பாம்புதான் அது. மரத்தின் பட்டை போலவே அசையாமல் நாங்கள் அதன் மீது ஒட்டி அமர்ந்திருந்தோம். எங்களுடைய மூச்சுச் சத்தம் எங்கள் இடத்தை அந்த பயங்கர மலைப்பாம்புக்கு காட்டிக் கொடுத்துவிடுமோ என்று கோண்ட் பயந்தார்.

சில நிமிடங்கள் கழித்து, சிறிய குச்சிகள் உடையும் சத்தத்தை ஒன்றிரண்டு முறை கேட்டோம். ஒரு மனிதன் தன் கைவிரல்களைச் சொடுக்கிடுவது போல, மெல்லிய சத்தம். அது ஒரு ஆண் கலைமான். அதன் கொம்புகள் சில கொடிகளில் மாட்டிக் கொண்டுவிட்டன. தன்னை விடுவித்துக்கொள்ள அந்தக் கொடிகளை உடைத்துக் கொண்டிருந்தது. அது போய் அதிக நேரம் இருக்காது. காடு ஏதோ எதிர்பார்ப்பில் இறுக்கமானது. சத்தங்கள் அடங்கத் துவங்கின. ஒரே நேரத்தில் நாங்கள் கேட்ட பத்துப் பன்னிரெண்டு சத்தங்களில், இப்போது மூன்று மட்டுமே எஞ்சியிருந்தன. பூச்சிகளின் டிக் டாக் டோக், அந்த மானின் மெல்லிய ஓலம். அந்த மானை, அந்த மலைப்பாம்பு நீரோடைக்கருகில் நெரித்து கொண்டிருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. இவ்விரண்டு சப்தங்கள் தவிர, எங்கள் தலைக்கு மேல், உயரத்தில் வீசிச்சென்ற காற்றின் ஓசை. இப்போது யானைகள் வந்து கொண்டிருந்தன. ஐம்பது யானைகள் கொண்ட கூட்டமொன்று, எங்கள் இடத்திற்கு கீழே வந்து விளையாடின. பெண் யானைகளின் கீச்சென்ற சத்தமும், ஆண் யானைகளின் உறுமலும் குட்டியானைகளின் ரன் ரன் சத்தமும் காற்றை நிறப்பின.

அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில்லை. நான் கண்ணைத் திறந்து கொண்டே தூங்க ஆரம்பித்துவிட்டேன். அந்த நிலையில், வண்ணக்கழுத்துடன் புறாக்களின் மொழியில் நான் பேசிக் கொண்டிருப்பது போலிருந்தது. தூக்கமா கனவா என்ற ஆழமான குழப்பத்தில் இருந்தேன். யாரோ என்னை உலுக்கி எழுப்பிவிட்டார்கள். “உன்னை என்னால் இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது. எழுந்திரு! பிரச்சினை வரப்போகிறது மதம் பிடித்த யானை ஒன்று இங்கேயே தங்கிவிட்டது. அது தொல்லை கொடுக்கப் போகிறது. அது தும்பிக்கையை நீட்டினால் தொட முடியாத உயரத்திலெல்லாம் நாம் இல்லை. தன் தும்பிக்கையை நீட்டினால் முகர்ந்து பார்த்தே நாம் இருப்பதை தெரிந்து கொண்டு விடும். காட்டு யானைகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது. நம் மீது பயம் வேறு. நம் வாசனையை கண்டுவிட்டால், நாம் எங்கே இருக்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்க நாள் முழுக்க இங்கேயே இருந்துவிடும். முழுச்சுக்கோ! எதிரி தாக்குவதற்கு முன், விழிப்பென்னும் ஆயுதம் ஏந்தி நில்” என்று கோண்ட் கிசுகிசுத்தபோது திகைத்துவிட்டேன்.

அது யானை தான் என்பதில் பிழையொன்றும் இல்லை. விடியலின் மங்கிய வெளிச்சத்தில், சின்னக் குன்று போல ஒன்று கருப்பாக எங்கள் மரத்திற்கு கீழே நகர்வதை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு மரமாகப் போய், இன்னமும் இலையுதிர்காலம் கைவைக்காத சாறுள்ள கிளைகளை உடைத்துக் கொண்டிருந்தது. பேராசையோடு, அந்த பருவத்தில் கிடைத்தற்கரிய உணவைக் வயிறு முட்ட தின்றுக் கொண்டிருந்தது. அரைமணி நேரம் கழித்து விசித்திரமான காரியத்தைச் செய்தது. ஒரு தண்டியான மரத்தின் கிளை மீது தன் முன்னங்காலை வைத்து, தும்பிக்கையை மேலே ஆட்டியது. அதை அப்படிப் பார்ப்பதற்கு பெரிய மாம்மூத் போல இருந்தது. தன் தும்பிக்கையை மிகப்பெரிதாக நீட்டி கிட்டத்தட்ட மரத்தின் உச்சிக் கொம்பைத் தொட்டு, அங்கிருந்த மிகவும் சுவையான கிளைகளை திருகியது. அந்த மரத்தின் நல்ல கிளைகளை மொட்டையடித்த பின்பு, எங்களுக்கு அடுத்திருந்த மரத்திற்கு வந்து, அங்கும் அதே வேலையைக் காட்டியது. இப்போது ஒரு ஒல்லியான மரத்தை தன் தும்பிக்கையால் பிடித்து கீழே இழுத்து, தன் முன்னங்காலை தூக்கி அதன் மேல் வைத்தது. தன் எடையால் அதை நொறுக்கிவிட்டது. அந்த மரத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தின்றது. காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அது போட்ட ஆட்டத்தில் பறவைகள், பயத்தில் குழறிக் கொண்டே காற்றில் பறந்தன. குரங்குகள் கதறிக்கொண்டு மரம் விட்டு மரம் தாவி ஓடின.

பிறகு அந்த யானை, உடைந்த மரத்தின் மிச்சத்தின் மீது காலை வைத்து, எங்கள் மரத்தை நோக்கி தும்பிக்கையை உயர்த்தி, நாங்கள் உட்கார்ந்து கொண்டிருந்த கிளை வரை தொட்டது. எங்கள் கிளையைத் லேசாகத் தொட்டிருக்கும், மனித வாடையை உணர்ந்து கொண்டு பெரிதாய் ஓலமிட்டு தன் தம்பிக்கையை இழுத்துக் கொண்டது. தனக்குத் தானே உறுமப் புலம்பியபின், மீண்டும் தும்பிக்கையை உயர்த்தி கோண்டின் முகத்திற்கு பக்கத்தில் கொண்டு வந்தது. அப்போது கோண்ட், கிட்ட்த்தட்ட யானையின் மூக்கிற்குள்ளேயே தும்மிவிட்டார். யானை அதிர்ந்துவிட்டது. மனிதர்கள் தன்னை சூழ்ந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டுவிட்டது. பயந்து போன பேயைப் போல, பிளிறிக் கொண்டும் கத்திக் கொண்டும், தனக்கு முன்னால் இருந்ததை எல்லாம் நொறுக்கிக் கொண்டு, காட்டினூடே ஓடியது. மீண்டும், பச்சை நத்தைகள் போல கனமான கிளிகள், வானத்தில் பறந்தன. குரங்குகள் கத்திக்கொண்டே மரம்விட்டு மரம் தாவின. பன்றிகளும் ஆண் கலைமான்களும் முட்டி மோதிக் கொண்டு கலவரப்பட்டுக்கொண்டு ஓடின. கொஞ்ச நேரத்திற்கு இந்தக் கொந்தளிப்பும் கூப்பாடும் குறையவில்லை. கிளையிலிருந்து இறங்கி வீடு நோக்கிப் போக தைரியம் வரவே கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியிருந்த்து.

நல்ல வேளையாக ஒரு நாடோடிக் கூட்டத்தைச் சந்திக்க, அவர்களின் குதிரை மீதேறி அன்றிரவு வீட்டை அடைந்தோம். முன்று பேருமே அடித்துப் போட்டது போல சோர்வாக இருந்தோம். ஆனால், டெண்டாமில் எங்கள் வீட்டில், வண்ணக்கழுத்தை அவன் கூண்டிற்குள் பார்த்தபோது எங்கள் சோர்வெல்லாம் ஓடிப்போய்விட்டது. என்னவொரு ஆனந்தம்! அன்றிரவு தூங்குவதற்கு முன், அந்த லாமா அமைதியாக, ஆனால் உறுதியாக “உன் பறவை பத்திரமாக இருக்கிறது” என்று சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

(தொடரும்)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.